ட்ரெண்டிங்

ஜல்லி, மணல் பற்றாக்குறையை தவிர்க்க கூடுதல் குவாரி !

குவாரி தொழிலில் இனி வெளிப்படைத்தன்மை: கடந்தகால தவறுகள் மீண்டும் நடக்காது – கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கம் உறுதி

சேலம், ஜூன் 13: சேலம் மாவட்டத்தில் குவாரி மற்றும் ஜல்லி உற்பத்தித் தொழிலில் இனி முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படத் தயாராக இருப்பதாகவும், கடந்தகாலங்களில் ஏற்பட்ட தவறுகள் இனி நடைபெறாது என்றும் சேலம் மாவட்ட கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது.

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சங்க செயலாளர் ராஜா,கனிம வளத்துறையின் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் முழுமையாக கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக் காலங்களில் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் நிர்வாக அழுத்தங்களால் குவாரிகளை முறையாக ஏலம் எடுத்து நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழலில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நேர்மையான முறையில் தொழிலை மேற்கொள்ள சங்கம் தயாராக இருப்பதாக கூறினார்.கனிம வளத்துறையினரை பொதுவாக குற்றம் சாட்டுவது தவறானது என்றும், விவசாயத்திற்கு அடுத்தபடியாக கட்டுமானத் துறைக்கு அத்தியாவசியமான தொழிலாக ஜல்லி மற்றும் மணல் உற்பத்தி திகழ்வதாகவும் அவர் விளக்கினார்.

எம்-சாண்ட் மற்றும் பி-சாண்ட் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கடந்த ஆட்சிக் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட அதே விலையிலேயே தற்போது விற்பனை நடைபெற்று வருவதாகவும், டீசல், வெடிமருந்து மற்றும் கல் கொள்முதல் செலவுகள் இருமடங்கு உயர்ந்திருந்தாலும் விலை உயர்வு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாக 46 குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நடைமுறையில் 80-க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்பட்டு வந்ததாகவும் அவர் கூறினார். மேட்டூர் அணையின் பாதுகாப்பு காரணமாக பல குவாரிகள் மூடப்பட்டுள்ளதுடன், தற்போது பல குவாரிகள் செயல்படாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் ஜல்லி மற்றும் மணல் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்த அவர், கூடுதல் குவாரிகளை திறக்க அனுமதி வழங்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

இனிமேல் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கனிமங்கள் ஏற்றப்படமாட்டாது என்றும், நடைமுறை சீட்டு இல்லாமல் எந்த வாகனத்திலும் அதிக சுமை ஏற்றப்படாது என்றும் சங்கம் உறுதியளித்துள்ளது.

அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, வெளிப்படையான மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்ட முறையில் குவாரி தொழிலை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.