ட்ரெண்டிங்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி! 

சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி 2- வது நாளாக சேலம் கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்று வருவதை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (ஏப்ரல் 10) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மக்களவைப் பொதுத் தேர்தல் 2024-க் கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது. மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள வேட்பாளர்கள் மார்ச் 20- ஆம் தேதி முதல் மார்ச் 27- ஆம் தேதி வரை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த வகையில், சேலம் மக்களவைத் தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவில் பயன்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Unit), கட்டுப்பாட்டுக் கருவிகள் (Control Unit), வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (VVPAT) ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்

பிரதிநிதிகளின் முன்னிலையில் தொடர்புடைய 6 சட்டமன்ற தொகுதிகளுக்காக சேலம் கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இருப்பு அறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளுக்கும், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 263 வாக்குச்சாவடிகளுக்கும், சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 241 வாக்குச்சாவடிகளுக்கும், ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் 345 வாக்குச்சாவடிகளுக்கும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளுக்கும் மற்றும் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 321 வாக்குச்சாவடிகளுக்கும் என மொத்தம் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 1,766 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்றைய தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 2வது நாளான இன்று வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியில் 1,200 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் அனைத்தும் இன்று அல்லது நாளை நிறைவடையும். வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நிறைவடைந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சி.சி.டிவி கேமிரா பொறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பு அறையில் மீண்டும் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். வாக்குப்பதிவின்போது தொடர்புடைய வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படும்.

இந்நிகழ்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.