ட்ரெண்டிங்

செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை......!

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். 

செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை குறித்து விரிவாகப் பார்ப்போம்! 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாக மோசடி என செந்தில் பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. கடந்த 2015- ம் ஆண்டு தேவசகாயம் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது. மோசடி செய்த பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக கடந்த 2016- ல் அமலாக்கத்துறை வழக்குப்பதிவுச் செய்தது. 

கடந்த 2019- ல் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்தது. 2021-ல் தி.மு.க. ஆட்சி அமைந்த போது, மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார். 

தன் மீதான வழக்கை ரத்துச் செய்ய வேண்டும் என 2022- ல் செந்தில் பாலாஜி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட வழக்குக்களை 2 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க 2023- ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

கடந்தாண்டு ஜூன் 13- ம் தேதி செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2023 ஜூன் 14- ஆம் தேதி அமலாக்கத்துறையினர், செந்தில் பாலாஜியை கைது செய்தனர். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 58 முறை நீட்டித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.