ட்ரெண்டிங்

தம்மம்பட்டி, உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்- ஆட்சியர் நேரில் ஆய்வு! 

தம்மம்பட்டி, உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்- ஆட்சியர் நேரில் ஆய்வு! 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி மற்றும் உலிபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (பிப்.21) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் இ.கா.ப. மற்றும் துறை சார்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தார். 

இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், உலிபுரத்தில் வருகின்ற பிப்ரவரி 23- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றும், தம்மம்பட்டியில் வருகின்ற பிப்ரவரி 25- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றும் ஐல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் பல்வேறு பகுதிகளிலிருந்து தலா 600 காளைகளும், தலா 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். 

இப்போட்டிகள் நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து காவல்துறை, வருவாய் துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுவினர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அம்சங்கள், மக்கள் அமரும் பார்வையாளர் மாடம், மேடைகள், ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைகளுக்கான தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை காவல் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்து தகுதி சான்று மற்றும் அமரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரத் துறையினர் மாடுபிடி வீரர்களின் உடற்கூறு தகுதியை சான்றிதழ் செய்வதோடு. போதுமான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்திடவும். உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதை கண்காணிக்க வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் இதர சம்பந்தப்பட்ட துறைகளை கொண்ட அமைப்பினை கோட்ட அளவில் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரால் உருவாக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடற்கூறு தகுதி சான்றளிக்கவும், பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டுமெனவும், காளைகள் போட்டியின் போது காயமுற்றால் அவைகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகளுடன் கால்நடை மருத்துவர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

காளைகளின் கொம்புகள் கூர்மையாக சீவப்பட்டிருக்கும் பட்சத்தில் கூர் பகுதிகளை மரக்கவசம் அமைத்திருக்க வேண்டும். இல்லையெனில் கால்நடை மருத்துவர் மூலம் கூர்மழுங்கச் செய்யவும். கால்நடைகளுக்குத் தண்ணீர் வசதி செய்து காளைகளின் திடக்கழிவு மற்றும் சிறுநீர் கழிவுகளை அகற்ற போதுமான ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் போட்டியில் பங்கேற்க வருவதற்கு முன்னர் 20 நிமிடத்திற்கு மேல் ஓய்வு எடுக்கவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு செய்வதற்கு இடவசதி ஏற்படுத்தப்படுவதுடன் மாடுபிடி தளம் 50 சதுர மீட்டர் பரப்பளவில் இடவசதியுடன் 100 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் பாதுகாப்பு குறித்து கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் காவல்துறையினரால் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும்போது வருவாய்த்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவத் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்திடும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.