ஆன்மிகம்

இடி தாக்கியதில் 20 ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு! 

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூருக்கு அருகே உள்ள காரைக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி அய்யந்துறை (வயது 47). இவர் ஆடு, மாடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில், வழக்கம் போல் ஆடுகளை மேய்த்துவிட்டு, நேற்று (செப்டம்பர் 01) மாலை 06.00 மணியளவில் தனக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு, அய்யந்துறை உறங்க சென்று விட்டார்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் இடி தாக்கியதில் ஆட்டுப்பட்டியில் இருந்த 16 செம்மறியாடுகள், 4 வெள்ளாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து காவல்துறையினருக்கும், வருவாய் துறையினருக்கு அய்யந்துறை தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார் 

இதையடுத்து, இன்று காலை வந்த காவல்துறையினரும், வருவாய் துறையினரும் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசு கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த ஆடுகளை உடற்கூராய்வு செய்து, அப்பகுதியில் புதைத்தனர். அத்துடன், காயமடைந்த ஆடுகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். 

உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூபாய் 3 லட்சம் என்றும், எனவே, உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று சேலம் மாவட்ட நிர்வாகத்தும், தமிழ்நாடு அரசுக்கும் விவசாயி அய்யந்துறை கோரிக்கை விடுத்துள்ளார்.