ட்ரெண்டிங்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்- அரசு அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை!

சேலம் மாவட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமானது, பிப்.21- ஆம் தேதி புதன்கிழமை அன்று ஆத்தூர் வட்டத்தில் நடைபெறவுள்ளதையொட்டி அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான
ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (பிப்.20) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, "பொதுமக்களின் இடங்களுக்கே சென்று, குறைகளைக் கேட்டு. உடனுக்குடன் தீர்வு காண, அரசு இயந்திரம் களத்திற்கே சென்று பணியாற்றும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டமானது கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் ஜனவரி மாதம் மேட்டூர் வட்டத்தில் இம்முகாம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இம்மாதத்திற்கான "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமானது, வருகின்ற நாளை புதன்கிழமை அன்று ஆத்தூர் வட்டத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட 22 வருவாய் கிராமங்களிலும் கள ஆய்வில் ஈடுபட்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வுகாண திட்டமிடப்பட்டுள்ளது.

ஆத்தூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் அனைத்து வருவாய் கிராமங்களிலும் பிப்.21- ஆம் தேதி அன்று இ-சேவை மையத்தின் செயல்பாடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள், அரசுத்துறை அலுவலகங்கள் ஆகியவற்றை கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனைத்தொடர்ந்து, அன்றைய தினம் கள ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டு, ஆய்வின் போது கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை தேவைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் கிராமத்தின் வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

மேலும், அரசு விடுதிகள், பூங்காக்கள், அறிவுசார் மையங்கள், தெரு விளக்கு செயல்பாடுகள், சமூக நலத்துறை சார்ந்த பணிகள், பேருந்து நிலையம், பொதுக் கழிப்பறை, அரசு மருத்துவமனை, பொது போக்குவரத்து வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

பிப்.22- ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், குடிநீர் விநியோகம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மேனகா, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.