ட்ரெண்டிங்

மின்கம்பியில் உரசியதில் லாரியில் தீ விபத்து....!

 

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் இருந்து விற்பனைக்காக வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, சேலம் மாவட்டம் மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை ஆகாஷ் (வயது 24) என்ற இளைஞர் ஓட்டி வந்தார். லாரி மேட்டூர் அருகே உள்ள கருப்பு ரெட்டியூர் பகுதிக்கு வந்தபோது, லாரியில் மின்கம்பி உரசியதில் வைக்கோலில் தீ பற்றியதுடன், மளமளவென எரிய தொடங்கியது. லாரியை அருகில் உள்ள தோட்டத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுனர் ஆகாஷ் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினார்.

 

தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மூன்று வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லாரியில் இருந்த வைக்கோல் மற்றும் லாரியின் முன்பகுதி தீயில் எரிந்து நாசமானது.

 

எரிந்து போன வைக்கோல் கட்டுகளின் மொத்த மதிப்பு ரூபாய் 50,000 இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து கருமலைக்கூடல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.