ட்ரெண்டிங்

தக்காளியின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி! 

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டதாலும், வரத்து குறைவாலும் தக்காளியின் விலை, கடந்த இரண்டு மாதங்களாகவே உச்சத்தில் இருந்தது. குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி ரூபாய் 200 என்ற உச்ச விலையையும் தொட்டது. 

தக்காளி விலை உயர்வு தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் என நாடு முழுவதும் எதிரொலித்தது. இதனால், தக்காளி விலை உயர்வைக் குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், தக்காளி விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ தக்காளி ரூபாய் 60- க்கு விற்பனை செய்து வருகிறது. 

இதன் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை குறைந்ததன் காரணமாகவும், தமிழகத்தில் தக்காளியின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் தக்காளியின் விலை ரூபாய் 100- க்கு கீழ் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

உழவர் சந்தைகளில் ரூபாய் 70 முதல் ரூபாய் 95 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. சூரமங்கலம் உழவர் சந்தையில் முதல் ரக தக்காளி ரூபாய் 85- க்கும், இரண்டாம் ரக தக்காளி ரூபாய் 80- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், முதல் ரக சின்ன வெங்காயம் ரூபாய் 60- க்கும், இரண்டாம் ரக சின்ன வெங்காயம் ரூபாய் 56- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.