ட்ரெண்டிங்

தாக்கலானது பட்ஜெட்- சேலத்திற்கான அறிவிப்புகள் என்னென்ன?

2025- 2026- ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 14) காலை 09.30 மணியளவில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 

அதில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பும் வரை மாதந்தோறும் ரூபாய் 2,000 உதவித்தொகை வழங்கப்படும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப கையடக்க கணினி (அல்லது) லேப்டாப் வழங்கப்படும், மூத்த குடிமக்களை பராமரிக்கும் வகையில் அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்படும், முதல்வர் படைப்பகம், புதிய தொழிற்பேட்டைகள், புதிய மினி டைடல் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. 

சேலம் மாவட்டத்திற்கான பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்! 

சேலம் மாவட்டத்தில் அதிநவீன வசதிகளுடன் புதிய நூலகம், முதல்வர் படைப்பகம், அன்புச் சோலை, தெலுங்கனூரில் தொல்லியல் அகழாய்வுகள், சேலம் ஆவின் பால் நிறுவனம் நவீனமயமாக்கப்படும் ஆகிய அறிவிப்புகள் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் புதிய தொழிற்பேட்டை, தகவல் தொழில்நுட்ப பூங்கா, நெசவாளர்களுக்கான சலுகைகள், மாவட்ட இளையர்களுக்கான வேலைவாய்ப்பு போன்ற மாவட்ட வளர்ச்சிக்கான அறிவிப்புகள் வரும் என பொதுமக்கள், தொழிற்துறையினர் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்றைய பட்ஜெட்டில் இடம்பெறாதது அவர்களை அதிர்ச்சியும், அதிருப்தியும் அடையச் செய்துள்ளது.