ட்ரெண்டிங்

மாணவிகளின் உயர்கல்விக்காக கொண்டு வரப்பட்டுள்ளத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும

 

சேலம் மாவட்டம், சங்ககிரியில் அமைந்துள்ள விவேகானந்தா கல்வி நிறுவனமும், சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து 12- ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சியை இன்று (ஜன.31) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில், சேலம் மாவட்டத்தில் இருந்து சுமார் 1,000- க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார்.

 

இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சேலம் மாவட்டப் பள்ளிக் கல்வித்துறையும், விவேகானந்தா கல்வி நிறுவனமும் இணைந்து 12- ஆம் வகுப்பு மாணவிகளுக்கான “நான் முதல்வன்” வழிகாட்டி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தது.

 

சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 7,000 மாணவிகள் எழுச்சியோடு கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் “நான் முதல்வன்” திட்டத்தின் பயன்களையும், உயர்கல்வியின் அவசியத்தையும் எடுத்துரைத்தோம். “பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்றால் கல்விதான் அதற்கு அடிப்படை” என்று சொன்ன தந்தை பெரியாரின் கொள்கைகளை மனதில் ஏந்திய, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் மாணவிகளின் உயர்கல்விக்காக கொண்டுவரப்பட்டுள்ள “புதுமைப் பெண்” போன்ற திட்டங்களை மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினோம். மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.