ட்ரெண்டிங்

சேர்வராயன் கோயில் தேரோட்டம் கோலாகலம்! 

சேலம் மாவட்டம், ஏற்காட்டின் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள சேர்வராயன் குகைக் கோயிலில் வைகாசி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக இன்று (ஜூன் 10) பிற்பகல் நடைபெற்றது. 

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சேர்வராயப்பெருமாள் மற்றும் காவிரியம்மாள் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேர் திருவிழாவில் ஏற்காடு சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

ஏற்காடு கிராம மக்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த ராகி, கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களை காணிக்கையாகச் செலுத்தி படையலிட்டு வழிபட்டனர். அதேபோல், திருத்தேர் சென்ற பாதையில் பக்தர்கள் தேங்காய்களை உடைத்தும், கற்பூரம் தீபம் ஏற்றியும் வழிபாடு நடத்தினர். 

சேர்வராயன் குகைக் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏற்காட்டிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.