ட்ரெண்டிங்

விபத்து வழக்கை வாபஸ் பெற மிரட்டல்? – தூய்மை பணியாளர் ஆட்சியரிடம் புகார் மனு !

 

சேலம், ஜூன் 17:

சாலை விபத்தில் காயமடைந்த தனது கணவருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், விபத்து தொடர்பான வழக்கை வாபஸ் பெறுமாறு சிலர் மிரட்டுவதாகவும் கூறி தூய்மை பணியாளர் ஒருவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள செலவடை பகுதியைச் சேர்ந்த லட்சுமி, தனது மகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளிடம் மனு அளித்தார். அந்த மனுவில், தனது கணவர் சரவணன் கடந்த ஜூன் 3-ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் கால் முறிவு அடைந்ததாகவும், இதுதொடர்பாக ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்து தொடர்பாக சிலர் தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தி வருவதுடன், தாம் பணிபுரியும் தூய்மை பணியாளர் வேலையில் இருந்து நீக்கிவிடுவோம் என மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். விபத்தில் காயமடைந்த தனது கணவரின் சிகிச்சை செலவுகளை ஏற்குவதாக கூறியவர்கள் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமி, கடந்த 13 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருவதாகவும், தற்போது குடும்பம் கடும் சிரமத்தில் இருப்பதாகவும் கூறினார். மேலும், தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுடன், மிரட்டல் விடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த மனு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.