சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தேங்காய் லோடுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி, பாரம் தாங்காமல் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பழைய உடையாம்பாட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பல்வேறு இடங்களில் தேங்காய்களை கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில், ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள தும்பல் பகுதியில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய்கள், லாரிகள் ஆத்தூருக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
பழைய உடையம்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜேந்திரன், லாரியை ஓட்டி வந்த நிலையில், கொத்தாம்பாடி பகுதியில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்பிய போது, பாரம் தாங்க முடியாமல் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பின்புறம் அமர்ந்திருந்த இரண்டு பேர் லேசான காயங்களுடன் நல் வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.


