ட்ரெண்டிங்

கிளியூர் நீர்வீழ்ச்சியில் காட்டெருமை தாக்கி சுற்றுலாப் பயணி படுகாயம் !

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கிளியூர் நீர்வீழ்ச்சி. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், கிளியூர் நீர்வீழ்ச்சியில் குளிக்காமல் சென்றதில்லை அந்த அளவிற்கு புகழ்பெற்றது. நீர்வீழ்ச்சியானது வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், வன விலங்குகள் அதிகம் வசித்து வருகின்றனர்.

இதை அறியாத சுற்றுலாப் பயணிகள், அதிகாலை வேளையிலும், இரவு நேரத்திலும் கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு செல்வதால் அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றது. அந்த வகையில், இன்று (ஜன.25) காலை 07.30 மணியளவில் ஈரோட்டைச் சேர்ந்த வேணுகோபால் (வயது 32) மற்றும் அவரது நண்பர்களுடன் கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக வந்த காட்டெருமை, வேணுகோபாலை வயிற்று பகுதியில் குத்திவிட்டு தூக்கி வீசியுள்ளது. இதையடுத்து, அவரது நண்பர்கள் கூச்சலிட, கிராம மக்கள் ஓடி வந்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விரைந்து வந்த வனத்துறையினர், படுகாயமடைந்த வேணுகோபாலை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்து வந்த ஏற்காடு காவல்துறையினர், வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.