ட்ரெண்டிங்

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் காலவரையற்ற போராட்டம்! 


தமிழகத்தில் வருவாய்துறை அலுவலர்களின் காலவரையற்ற போராட்டம் தொடங்கியுள்ளது. 

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு முடிவின் படி, வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 

தமிழகத்தின் 38 மாவட்டங்கள் 115 வட்டங்களில் உள்ள வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 14,000- க்கும் மேற்பட்ட அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வருவாய்த்துறையினர் அலுவலகங்களில் அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றத்திற்கான அரசாணையை வெளியிட வேண்டும், அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உயிர் ஆபத்து மிக்க பல பணிகளை மேற்கொள்ளும் வருவாய்த்துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும், நாடாளுமன்றத் தேர்தல் நிதி ஒதுக்கீடு, முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களுக்கு கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால் அதற்குள் இந்த குறைகளை நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வருவாய்த்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவோம் என வருவாய்த்துறை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.