ட்ரெண்டிங்

ரயில் இயங்கும் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!

 

சேலம் மாவட்டம், ஆத்தூரில் ரயில் பயணிக்கும் நேரங்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, மேம்பாலம் அமைத்துத் தர பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் செல்லும் பிரதான சாலை அருகே ரயில் வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், விவசாயிகள், மாணாக்கர்கள், பணிக்கு செல்வோர் என பலரும் அவதிக்குள்ளாவதாகக் கூறப்படுகிறது.

 

மேலும், மயானத்திற்கு செல்லவும் இந்த சாலை பயன்படுத்தப்படுவதால் மிகுந்த சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில், அதிகரித்து வரும் வாகனங்களின் பயன்பாடு, நேர விரயம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு ரயில்வே மேம்பாலம் அமைத்துத் தந்தால், மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

இது குறித்து ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கர் கூறுகையில், கடந்த ஆட்சிக் காலத்தில் ரயில்வே மேம்பாலம் மற்றும் ரிங் ரோடு அமைப்பதற்கான திட்டப் பணிகள் வகுக்கப்பட்டதாகவும், தற்போது போதிய நிதி இல்லாததால் பணிகள் தொடங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு முன்னுரிமை அளித்து திட்டம் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் .