ட்ரெண்டிங்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை- வரவு வைக்கும் பணி தொடக்கம்!

 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்காக, மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கும் பணித் தொடங்கியுள்ளது.

 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது.

 

அதன்படி, மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்துள்ள 11.85 லட்சம் பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், 3 லட்சம் பேரின் மனுக்கள் திட்டத்தின் தகுதியானவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (நவ.10) சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கவுள்ளார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், கலைவாணர் அரங்கத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

 

இந்த நிலையில், காலதாமத்தைத் தவிர்க்கும் வகையிலும், தொழில்நுட்ப கோளாறுகளைத் தவிர்க்கும் வகையிலும், தமிழகம் முழுவதும் மேல்முறையீடு செய்வதர்களில் தகுதியானவர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 வரவு வைக்கும் பணி இன்று (நவ.09) காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில் குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டு வருகிறது.

 

அதேபோல், மற்ற பயனாளிகளுக்கும் ரூபாய் 1,000 செல்லும் பணி நாளை தொடங்கவுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.