சேலம் மாநகரில் உள்ள முள்ளுவாடி கேட் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
கடந்த 2016- ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுமார் 130 கோடி மதிப்பீட்டில் சேலம் மாநகரின் மையப்பகுதியான முள்ளுவாடி கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தனர். ஆட்சி மாற்றம், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தாமதமான நிலையில், மேம்பால பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, விறுவிறுப்பாக நடைபெற்ற மேம்பாலப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்த நிலையில், முள்ளுவாடி கேட் மேம்பாலத்தை தமிழக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், தி.மு.க.வைச் சேர்ந்த சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முள்ளுவாடி கேட் மேம்பாலம் திறக்கப்பட்டதால் மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


