ட்ரெண்டிங்

நூதன முறையில் மனு அளித்த இந்திய இளைஞர் பெருமன்றத்தின் நிர்வாகிகள்!

 

வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 10) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி ஆட்சியரிடம் வழங்கினர். அதேபோல், சாலை வசதிக்கோரியும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரியும், முதியோர் ஓய்வூதியம் கோரியும் பொதுமக்கள் மனுவை வழங்கியுள்ளனர். 

இந்த நிலையில், தக்காளி உள்பட காய்கறி மற்றும் மளிகைப்பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், இந்திய இளைஞர் பெருமன்றத்தின் நிர்வாகிகள், தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தட்டில் தக்காளியுடன் இருபுறமும் பொம்மைத் துப்பாக்கி ஏந்தியவாறு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நூதன முறையில் மனு அளித்தனர். 

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.