சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்ற சோதனையில், முக்கிய ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் சதீஸ், மனோன்மணிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராம் கணேஷ் ஆகியோர் இணைந்து அரசு அனுமதியின்றி பூட்டர் பவுண்டேஷன் என்ற பெயரில் நிறுவனம் துவங்கியுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், ஏழு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான ஏழு குழுவினர், பல்கலைக்கழகத்தில் ஏழு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
முன்னதாக, தமிழ் துறைத்தலைவர் அலுவலகத்தில் சோதனை நடத்தி பெரியசாமியிடம் விசாரணை செய்யப்பட்டது. இதேபோல், மாணவர் பயன்பாட்டு மையம், பூட்டர் பவுண்டேஷன், நிதி அலுவலகம், அறிவுசார் தர மேம்பாட்டு மையம், துணைவேந்தர் அலுவலகம் ஆகிய இடங்களில் தொடர் சோதனை நடத்தினர்.
சுமார் 13 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது.


