ட்ரெண்டிங்

கரும்பு விவசாயிகள் மறியல் போராட்டம்!

 

கரும்பு ஏற்றிய லாரிகளை சாலையில் நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 1,000 ரொக்கம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், நாளை (ஜன.10) முதல் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும் கரும்புகளை கரும்பு விவசாயிகளிடம் இருந்து அந்தந்த மாவட்ட கூட்டுறவுத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் கொள்முதல் செய்து சம்மந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கோல்நாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 100- க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்புகளை சாகுபடி செய்திருந்தனர். இந்த கரும்பு விவசாயிகளிடம் இருந்து அரசு அதிகாரிகள், செங்கரும்புகளை கொள்முதல் செய்துள்ளனர். எனினும், லாரியில் ஏற்றப்பட்டுள்ள கரும்புகளை, அதிகாரிகள் கொள்முதல் செய்ய மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

 

லாரியில் ஏற்றப்பட்ட கரும்புகள் 10- நாட்களாக அப்படியே இருப்பதைக் கண்டு வேதனையடைந்த விவசாயிகள், இன்று (ஜன.09) காலை 11.00 மணியளவில் கோல்நாயக்கன்பட்டி சாலையில் கரும்புலோடுகளை கொண்ட லாரிகளை சாலையில் நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

 

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கரும்பு விவசாயிகள் சாலையில் லாரிகளை நிறுத்திப் போராட்டம் நடத்தி வருவதால், அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.