தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியம் உயர்வு, குடும்ப ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஜன.09) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சி.ஐ.டி.யு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து, சென்னையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையாளர் ஆகியோர் தலைமையில் மூன்றாவது முறையாக இன்று (ஜன.08) முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டப்படி நாளை (ஜன.09) வேலை நிறுத்தம் தொடரும் என்று போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை (ஜன.09) பேருந்துகள் இயக்கப்படும். தொ.மு.ச. சார்பில் தொழிலாளர்கள் நாளை பணியில் ஈடுபட உள்ளதால் பேருந்துகள் இயக்கப்படும். இரண்டு கோரிக்கைகள் ஏற்பதாக உறுதியளிக்கப்பட்டதால் பொங்கலுக்கு பிறகு முடிவெடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. நிதி நிலை தற்போதுள்ள சூழலில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ள நிலையில், போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த அறிவிப்பு பயணிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அத்துடன், ஆம்னி பேருந்துகளின் பயண கட்டணம் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு, போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் பேசி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


