ட்ரெண்டிங்

சேலத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்!

 

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி மற்றும் கருப்பூர் ஆகிய பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இன்று (பிப்.14) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

இந்த ஆய்விற்குப்பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, "சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள், சாலை மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், இன்று காலை கருப்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அதன் பொறுப்பு அலுவலர்களால் உரிய நேரத்தில் பணிகள் தொடங்கப்படுகின்றனவா என்பது குறித்தும், சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக திடக்கழிவு மேலாண்மை மையங்களுக்கு மறுசுழற்சி செய்திட அனுப்பி வைக்கப்படும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

மேலும், கருப்பூர் பேரூராட்சி, ராஜகணபதிநகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புர சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 98.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளையும், இப்பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1.59 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைப்பு பணிகள் மற்றும் ரூபாய் 65.50 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ள சிமெண்ட் 16,060 சீரமைப்புப் பணியினையும் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து, கன்னங்குறிச்சி பேரூராட்சி, 3- வது வார்டு பகுதியில் கலைஞரின் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1.35 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார்சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பு அமைக்கப்பட்டுவரும் பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, சீரான குடிநீர் விநியோகம் வீடுகளுக்கு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், தூய்மைப் பணியாளர்கள் நாள்தோறும் குப்பைகளை முறையாக சேகரித்து வருவது குறித்தும், தெருவிளக்குகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து தொடர்புடைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

 

இந்த ஆய்வின்போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேஷ்ராம், செயற்பொறியாளர் கணேசன், கன்னங்குறிச்சி பேரூராட்சித் தலைவர் குபேந்திரன், செயல் அலுவலர்கள் லாரன்ஸ், நீலாதேவி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.