ட்ரெண்டிங்

பயிர் காப்பீடு- விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்! 

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலன்கருதி நெல்லுக்கான ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்தில் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 105- ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 130-ம் கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்கியதற்கு இன்றைய தினம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இவ்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசால் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்ப்பதுடன் விவசாயிகளின் குறைகளை அனைத்துத் துறை அலுவலர்கள் அறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் இதுபோன்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகின்றன.

விவசாயிகளுக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் நிதியுதவி வழங்கிடவும், வருமானம் கிடைக்கச் செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெறச் செய்யவும், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக நடப்பு காரீப் பருவத்திற்கு பச்சைப்
பயறு, தட்டைப் பயறு, நெல், சோளம், சாமை, நிலக்கடலை மற்றும் ராகி ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்து கொள்ளக் கேட்டுகொள்ளப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் அடங்கல், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை நகல், நில உரிமைப் பட்டா ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியத் தொகை செலுத்தி, எதிர்பாராத
இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், யூரியா 6,201 மெட்ரிக் டன்னும், டிஏபி 1,766 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,821 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 18,710 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 28,498 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 997.9 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு ஜூன் 2024 வரை 266 மி.மீ மழை பெய்துள்ளது. அதேபோன்று, மே மாதம் முடிய 16,114.9 ஹெக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி உரிய முறையில் விவசாயப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் சார்பில் விதைகள் தேர்வு மற்றும் விதைப்பு முறைகள் குறித்து கண்காட்சி மற்றும் வேளாண் உற்பத்தியாளர்கள் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சிறுதானியங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் இரவிக்குமார், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநர் டாக்டர் பாரதி, தோட்டக்கலை துணை இயக்குநர் ஜி.மாலினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள், வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் குமரன் மற்றும் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.