ட்ரெண்டிங்

மாமனாரைத் துப்பாக்கியால் சுட்ட மருமகன்!

 

நிலத்தகராறு காரணமாக, மாமனாரை மருமகன் துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம், ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி அருகே கெடமலை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 60). விவசாயியான இவர், தனது அண்ணன் மகளான குப்பாயி என்பவரை தத்தெடுத்து வளர்த்து, சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

 

சௌந்தர்ராஜன் புதுப்பட்டி பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், வெள்ளையன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது 4 சென்ட் நிலத்தை வேறு ஒருவருக்கு அடமானமாக வைத்து, 20 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார்.

 

இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடமான நிலத்தை செளந்தர்ராஜன் மீட்டு பத்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டார்.

 

இந்நிலையில், எனது நிலத்தின் பத்திரத்தை நீ எதுக்கு வாங்கினாய் எனக் கூற வெள்ளையனுக்கும், சௌந்தர்ராஜனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று (ஜன.04) தனது அரளித் தோட்டத்தில் வெள்ளையன் வேலை செய்துக் கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

இதில் ஆத்திரமடைந்த செளந்தர்ராஜன் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வெள்ளையனை சுட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதில் வெள்ளையனின் இடது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமகிரிப்பேட்டை காவல்துறையினர், வெள்ளையனை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.