குடிநீர் தொடர்பான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்ற அறிவுறுத்தல்!
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருவது குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் இன்று (மார்ச் 13) சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து கண்காணித்திட அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் சேலம் மாவட்டம் முழுவதும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் தொடர்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 108.92 அடியாக உள்ளது. இது கோடைகாலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அளவு குடிநீரை வழங்குவதற்கு போதிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றையதினம் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளுக்கும் சீரான குடிநீர் கிடைத்திட மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் இன்றையதினம் நடத்தப்பட்டது.
சேலம் மாநகராட்சியானது கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி மற்றும் சூரமங்கலம் ஆகிய 4 மண்டலங்களில் 60 வார்டுகளை உள்ளடக்கியதாகும். இதில் தோராயமாக 2024 கணக்குபடி 10.78 லட்சம் மக்கள் தொகையை கொண்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்கு தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் நாள் ஒன்றிற்கு 147 எம்.எல்.டி குடிநீர் தேவைப்படுகிறது. இதனைப் பூர்த்தி செய்யும் வகையில் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நங்கவள்ளி குடிநீர் திட்டம் மற்றும் சேலம் மாநகராட்சிக்கென தனி குடிநீர் திட்டங்கள் மூலமாக பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சிப்பகுதிகளில் உள்ள 60 கோட்டங்களில் 57 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் மூலம் 3 முதல் 6 நாள்களுக்கு ஒருமுறை பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, குடிநீர் குழாய் உடைப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் குடிநீர் வழங்கிட தாமதம் ஏற்படும் பட்சத்தில் அதனை விரைவில் சீரமைத்து குடிநீர் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, குடிநீர் குழாய்கள் செல்லும் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும்போது பாதுகாப்பாக குடிநீர் குழாய்களுக்கு பழுது ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ளவும், மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் ஏதேனும் இருப்பின் அவற்றை விரைந்து முடித்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கோடை காலங்களில் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ள இடங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அனைத்துப் பகுதிகளிலும் குப்பைகள் தேங்காத வகையில் அவற்றை உடனுக்குடன் அகற்றப்பட வேண்டமெனவும், கழிவுநீர் கால்வாய்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று, சாலைகள், தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குடிநீர் பிரச்சனை வராதவாறு செயல்பட வேண்டுமென மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பாக 0427-2212844 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். குடிநீர் தொடர்பான புகார்கள் ஏதேனும் வரப்பெற்றால் அதன்மீது தொடர்புடைய துறை அலுவலர்கள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
மேலும், சேலம் மாநகராட்சிக்கென தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த அறிவிப்புகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும், மாநகராட்சியில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி மற்றும் மூக்கனேரி ஆகிய நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகள் குறித்தும், தூய்மை பாரத இயக்கம் 2.0, பள்ளிகள் மேம்பாட்டு நிதி, 15- வது நிதிக்குழு மானியத்திட்டம், நமக்கு நாமே திட்டம், தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டம். அம்ரூத் 2.0,சாலைப் பணிகள் உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பாக இன்றையதினம் காலை அஸ்தம்பட்டியில் உள்ள நீரேற்று நிலையத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது என்பது குறித்தும். வழங்கப்பட்டுவரும் குடிநீரின் அளவு குறித்தும், மேல்நிலை குடிநீர் தொட்டிகள் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் கிளோரினேசன் செய்யப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப., மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாநகரப் பொறியாளர் (பொ) செந்தில்குமார், மாநகர் நல அலுவலர் மரு.முரளி மற்றும் மண்டலக்குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் உடனிருந்தனர்.


