ட்ரெண்டிங்

பனமரத்துப்பட்டி, மல்லூரில் ஆட்சியர் ஆய்வு! 

 

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி மற்றும் மல்லூர் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (மார்ச் 26) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்விற்கு பின் ஆட்சியர் தெரிவித்ததாவது, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்றிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு ஏற்ப புதிய ஆழ்துளை கிணறுகள் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருவது அரசு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து குடிநீர் தேவையை கருத்திற்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருவது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், பள்ளிகள் உட்கட்டமைப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞர் கனவு இல்லம், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

அந்த வகையில், இன்றையதினம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 14.00 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சிமெண்ட் கான்கிரீட் சாலையினையும், பனமரத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூபாய் 10.01 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையலறைக் கூடத்தினையும், பள்ளித்தெருபட்டி ஊராட்சியில் குழந்தை நட்பு பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 28.35 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும், நபார்டு திட்டத்தின் கீழ் பள்ளித்தெருபட்டி ஊராட்சியில் ரூபாய் 29.97 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அதேபோன்று பள்ளித்தெருபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூபாய் 1.08 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ளதையும், பெரமனூர் ஊராட்சியில் ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள நூலகத்தினையும், மல்லூர் பேரூராட்சியில், வாழக்குட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 16.82 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கணினி அறையினையும், பாரப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 14.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் மற்றும் பாரப்பட்டி மேச்சேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 17.30 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வகுப்பறை கட்டிடமும், தெற்கு பகுதியில் ரூபாய் 34.60 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கிராமப்புற வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் பாரப்பட்டி ஊராட்சியில் தலா ரூபாய் 1.50 லட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், நெய்க்காரப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 41.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலையம் மற்றும் ரூபாய் 14.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினையும், நெய்க்காரப்பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 10.01 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையலறைக் கூடத்தினையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

முன்னதாக பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் வள்ளலார் நகர் குறுக்குத்தெருவில் ரூபாய் 56.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மற்றும் ரூபாய் 7.50 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் புதுப்பிக்கப்பட்டுள்ள பணியினையும், மல்லூர் பேரூராட்சி,அத்திக்குட்டையில் சுவர் அடித்தளம், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருவதையும், மல்லூரில் ரூபாய் 22.00 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டடத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டு வருவதையும். மல்லூர் பேரூராட்சியில் ரூபாய் 1.62 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை அமைக்கப்பட்டு வருவது என மொத்தம் ரூபாய் 6.12 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பனமரத்துப்பட்டி பேரூராட்சி மற்றும் மல்லூர் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்த ஆய்வின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குருராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.