ட்ரெண்டிங்

ராகி கொள்முதல் தொடர்பான ஆட்சியரின் அறிவிப்பு!

 

மேட்டூர் மற்றும் ஓமலூரில் திறக்கப்படவுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் இராகி கொள்முதல் செய்யப்படுகிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உத்தரவின்படி கே.எம்.எஸ் 2023-2024 கொள்முதல் பருவத்தில் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் வட்டம் மேச்சேரி அருகில் பொட்டனேரி கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டிடம் மற்றும் ஓமலூர் வட்டம் P. நல்லாகவுண்டன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிட வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி இராகி கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது.

 

மேலும், இராகி குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 3,846/- (ஒரு கிலோ 38.46) என்ற விலையில் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படுகின்றது. கொள்முதல் செய்யப்படும் இராகிக்கு கிரைய தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் எவ்வித பிடித்தமும் இன்றி நேரிடையாக செலுத்தப்படுகிறது. இதனை மேட்டூர் மற்றும் ஓமலூர் வட்டாரத்தில் உள்ள விவசாய பெருங்குடி மக்கள் தாங்கள் விளைவித்த இராகியினை நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 99445- 76870, 99944- 72138, 94431-18108 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.