ட்ரெண்டிங்

சேலம்- மேட்டூர் இரட்டை ரயில் பாதை நாட்டிற்கு அர்ப்பணிப்பு!

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய முனையத்தை இன்று (ஜன.02) காலை 11.00 மணிக்கு நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணித்தார். அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் நேரில் பார்வையிட்டார். அவருக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமருக்கு விளக்கினார்.

அதைத் தொடர்ந்து, திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சுமார் ரூபாய் 20,000 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் இருந்து கோவை வரையிலான சுமார் 294 கி.மீ. தூரத்திற்கு 2,187.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயற்கை எரிவாயுவை குழாய் பதிக்கும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, திருச்சியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் கோவைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.  

அதேபோல், சேலம்- திருப்பத்தூர்- வாணியம்பாடி சாலையில் 36 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலான நான்கு வழிச்சாலையான தேசிய நெடுஞ்சாலை எண் 179A- ஐ பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, சேலம்- ஓமலூர்- மேட்டூர் அணைப் பகுதி வரை சுமார் 41.1 கி.மீ. தூரம் வரையிலான இரட்டை ரயில் பாதையையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார். 

இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.