குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, குழந்தை திருமண சட்டம் 2006-ன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் செய்யும் திருமணம் குழந்தை திருமணமாகும். குழந்தை திருமணம் செய்யப்படுவதால் குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வு, உடல் நலம், கல்வி ஆகியவை கிடைக்காமல் குழந்தைகளின் முன்னேற்றம் தடைப்பட பெரிதும் வாய்ப்பாக அமைகிறது. குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அவர்களின் பாதுகாப்பான சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவில் குழந்தை திருமண தடுப்பு அலுவலர்களாக மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள், விரிவாக்க மற்றும் ஊர் நல அலுவலர்கள் ஆகியோரைக் கொண்ட குழு செயல்பட்டு வருகின்றது. மேலும், தற்பொழுது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிபுரியும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் பகுதிகளில் குழந்தை திருமணம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனையும், ரூபாய் 1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை பள்ளி, கல்லூரி, கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தை திருமணத்திற்கு மிக முக்கியமான காரணமாக பள்ளி இடைநிற்றல் ஒரு காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளின் பள்ளி இடைநிற்றல் விவரங்களை மாவட்ட சமூக நல அலுவலரிடம் வழங்கி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி பள்ளி படிப்பைத் தொடரச் செய்வதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)