சேலம் மத்திய மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் நல சங்கத்தின் முதலாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ரத்தினவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செயலாளர் சீனிவாசன், துணைத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ ராமதாஸ், பாமக நிர்வாகி அருள் மற்றும் பேரூராட்சி தலைவர் குபேந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஜேசிபி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் ரத்தினவேல், “தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாறி வருவதால் ஜேசிபி இயந்திரங்களுக்கான வாடகையை நிர்ணயிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் சுமார் 5,000 ஜேசிபி இயந்திரங்களும், மாநகரில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்” என்றார்.
மேலும், “டீசல் விலை உயர்வு, ஆப்பரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டிய அவசியம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஜேசிபி வாடகையை ₹2,500-இல் இருந்து ₹3,500 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இந்த விலையேற்றத்திற்கு வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்”என கேட்டுக்கொண்டார்.
அதேபோல், “காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு மற்றும் தனியார் பணிகளுக்காக வாகனங்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது. இதை கருத்தில் கொள்ளாமல் போக்குவரத்து போலீசார் ஆன்லைன் மூலம் அபராதம் விதித்து வருகின்றனர். இரவு நேரங்களிலும் அபராத அறிவிப்புகள் வருவதால் தொழில் செய்வதே கடினமாகியுள்ளது” என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும்,“சாலைவரி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களால் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சிலர் அனுமதி இல்லாத இடங்களுக்கு ஜேசிபி வாகனங்களை அழைத்து சென்று வேலை வாங்கிக் கொள்கின்றனர். பின்னர் அந்த இடங்களில் நடந்த பணிகளுக்காக எங்கள் மீதே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு உரிமையாளர்களுக்கு தொடர்பில்லை” எனவும் தெரிவித்தார்.
அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தார்.
இந்த கூட்டத்தில் பொருளாளர் சிவராஜா, துணை பொருளாளர் ராமு, சட்ட ஆலோசகர் வசந்தகுமார், செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஜேசிபி, பொக்லைன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.



