ட்ரெண்டிங்

ரோபோடிக் தொழில்நுட்பப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள்!

 

சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்த மென் பொறியாளர் கிருத்திகா கந்தசாமி, ஜெர்மனைச் சேர்ந்த ரோபோ தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறது. இவரது ஏற்பாட்டில் ரோபோட்டிக்ஸ் ஆப் தமிழ்நாடு மற்றும் கோவை பிக்போதி அகாடமி ஆகியவை இணைந்து வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 50 மாணவர்களுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்பம் குறித்தும், அடிப்படை இயக்கும் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, பள்ளியில் உள்ள  கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர் புகழ் தலைமை வகித்தார். மென்பொறியாளர் கிருத்திகா கந்தசாமி, பிக்போதி அகாடமி செயல் அதிகாரி சாந்தகுமார், அரிமா சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், தேவராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தனர்.