ட்ரெண்டிங்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் விவசாயிகள் கவலை! 

 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு சொற்ப அளவே தண்ணீர் வருவதால், அணையின் நீர்மட்டம் 62.49 அடியாகக் குறைந்துள்ளது. 

மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 611 கனஅடியில் இருந்து 305 கனஅடியாகக் குறைந்துள்ளது. பாசனத்திற்காக அனல் மின்நிலையம் வழியாக, வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீரும், சுரங்க மின்நிலையம் வழியாக 10,000 கனஅடி நீர் என மொத்தமாக 12,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

அணைக்கு நீர்வரத்து மிகவும் சொற்பமாகவும், தண்ணீர் வெளியேற்றம் அதிகமாகவும் இருப்பதால் அணையின் நீர்மட்டம் நேற்று இருந்ததை விட, ஒரு அடி அளவிற்கு குறைந்துள்ளது. நாளுக்கு நாள் நீர்மட்டம் குறைந்து வருவது, டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததும், கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதும், அணைக்கு நீர்வரத்து குறைந்ததற்கான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.