ட்ரெண்டிங்

ஏற்காட்டில் கடும் குளிர்.....குவிந்த சுற்றுலா பயணிகள்!

 

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சேலம் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது ஏற்காடு. கடந்த சில வாரங்களாக ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதித்துள்ளது.

 

ஏற்காடு மலைப் பகுதிகளில் உள்ள சாலைகளில் எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவுவதால், பகல் நேரங்களில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். அவ்வப்போது, ஏற்காட்டில் சாலை மழையும் பெய்து வருகிறது.

 

இதனிடையே, ஏற்காட்டில் குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். ஏற்காட்டில் உள்ள லேடீஸ் சீட், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதியது.

 

நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள், ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால், ஏற்காட்டில் உள்ள சாலையோரக் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

அதேபோல், ஏற்காட்டில் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.