ட்ரெண்டிங்

மீண்டும் உலகைத் திரும்பி பார்க்க வைத்த மாடர்ன் தியேட்டர்ஸ்!

 

தமிழ் திரையுலகத்திற்கு அடித்தளம் அமைத்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களாக பேசும் பொருளாகியுள்ளது. எந்த சூழ்நிலையிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் அடையாளத்தை அழித்துவிடக் கூடாது என்ற கோரிக்கையையும் வலுத்து வரும் சூழலில், மாடர்ன் விஷயங்களைத் திரையில் தந்த மாடர்ன் தியேட்டர்ஸ் பெருமைகளைச் சற்றுத் திரும்பிப் பார்க்கலாம்.

 

கலையுலக மாமேதை, திரைப்படத்துறையின் திசைக்காட்டி, தென்னக திரையுலகத்தின் தந்தை எனப் போற்றப்படும் டி.ஆர்.சுந்தரம், கடல் கடந்து இங்கிலாந்து நாட்டில் கல்வி பயின்று பட்டங்களைப் பெற்றார். மலை வளம் கொண்ட சேலம் மாவட்டத்தில், மன வளம் கொண்ட டி.ஆர்.சுந்தரம், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை கடந்த 1935- ஆம் ஆண்டு தொடங்கினார்.

 

தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலேயே திரைப்படத் துறையில் இரட்டை வேடம், வண்ணத் திரைப்படம் என பல புதுமைகளைப் புகுத்திய பெருமை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தையே சேரும். சேலம்- ஏற்காடு பிரதான சாலையில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 1935- ஆம் தேதி தொடங்கப்பட்டது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்.

 

தயாரிப்பாளரும், இயக்குனருமான டி.ஆர்.சுந்தரம் தொடங்கிய இந்த நிறுவனம் தான், தென்னிந்தியாவில் மிகப்பெரிய படப்பிடிப்புத் தளம் ஆகும். ஒரு திரைப்படம் முழுமைப் பெறுவதற்கு தேவையான அத்தனைக் கூடங்களும் ஒரே வளாகத்தில் அமைத்ததோடு, வெளிநாட்டு திரைப்படக் கலைஞர்களுடன் சேர்ந்து பல புதுமைகளையும் புகுத்தி, ரசிகர்களைப் பிரமிக்க வைத்தார் டி.ஆர்.சுந்தரம்.

 

பி.யு.சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்த முதல் இரட்டை வேடத் திரைப்படமான உத்தமபுத்திரன், அடித்தளமாக அமைந்தது. அண்டக்கா கசம், அப்புக்கா குக்கம் என்ற மறக்க முடியாத வசனம் இடம் பெற்ற அலிபாபாவும், 40 திருடர்களும் என்ற திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் தமிழில் உருவான முதல் வண்ணத் திரைப்படம்.

 

கடந்த 1935- ஆம் ஆண்டு முதல் 1979- ஆம் ஆண்டு வரையிலான கால கட்டங்களில் தமிழ் திரையுலகின் முக்கிய அங்கமாக திகழ்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம், 150- க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது. குறிப்பாக, தமிழ் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் படங்களைத் தயாரித்து அசத்தியுள்ளது.

 

முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., கருணாநிதி மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரை திரையுலகில் அறிமுகப்படுத்தியப் பெருமை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் டி.ஆர்.சுந்தரத்தையே சேரும்.

 

2004- ஆம் ஆண்டிற்கு பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் உள் கட்டமைப்புகள் அகற்றப்பட்டு, குடியிருப்புகளாக மாற்றப்பட்டப் போதிலும், முக்கிய அடையாளமான கலை நயமிக்க வாயில் இதுவரைக் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இந்த இடம் தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.