ட்ரெண்டிங்

அணையின் நீர்மட்டம் 143 நாட்களுக்கு பிறகு மீண்டும் 69 அடியாக உயர்வு!

 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 143 நாட்களுக்கு பிறகு மீண்டும் 69 அடியாக உயர்ந்துள்ளது.

 

தமிழகம்- கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதன் காரணமாக, அணைக்கான நீர்வரத்தை விட, தண்ணீர் திறப்பு குறைவாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம், கடந்த 63 நாட்களில் 38 அடி அளவிற்கு உயர்ந்திருக்கிறது.

 

அதேபோன்று, மேட்டூர் அணையின் நீர்மட்டம், கடந்த ஜூலை மாதம் 23- ஆம் தேதி 68 அடியாகக் குறைந்த நிலையில், சுமார் 143 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 69 அடியாக உயர்ந்திருக்கிறது. வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்த பிறகு, இறுதிப்போக சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்படும் நிலையில், மேட்டூர் அணையில் இருந்து சுமார் 22 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இன்று (டிச.12) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2,730 கனஅடியில் இருந்து 2,823 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 68.77 அடியில் இருந்து 69.02 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 31.86 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 250 நீடிக்கிறது.