ட்ரெண்டிங்

சேலத்தில் நடந்த Happyning Street நிகழ்ச்சி...பொதுமக்கள் உற்சாகம்!

சேலத்தில் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் Happyning Street நிகழ்ச்சி இன்று (செப்.03) காலை 06.00 மணி முதல் காலை 09.00 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலை 05.00 மணி முதலே மக்கள் குவியத் தொடங்கியதால், நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகத் தொடங்கியது. 

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசிய சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், "போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை இளைஞர்கள் ஏற்படுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களை இயக்கும் போது, கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அத்துடன், போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி விபத்தில்லாப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார். 

இந்த நிகழ்ச்சியில், சேலம் மாநகர காவல்துறை உதவி ஆணையர் சந்திர  மௌலி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேலத்தில் முதன்முறையாக நடைபெற்ற Happyning Street நிகழ்ச்சியில் 8,000 பேர் வரை மட்டுமே கலந்து கொள்வார்கள் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை குடும்பம், குடும்பமாக சுமார் 13,000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை உற்சாகப்படுத்தியது. 

பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும், பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இசைக்கு ஏற்றவாறு கூடியிருந்த பொதுமக்கள் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இதுபோன்ற நிகழ்ச்சிகளை வாரந்தோறும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள், நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

 Happyning Street நிகழ்ச்சியையொட்டி, சுமார் நான்கு மணி நேரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், பாதுகாப்புப் பணியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல், மருத்துவக்குழுவினர், தீயணைப்புத்துறை வீரர்கள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். 

வெகு விமர்சையாக நிகழ்ச்சியை நடத்த உதவியதற்காக, காவல்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவக்குழுவினர் உள்ளிட்டோருக்கு நிகழ்ச்சியின் மீடியா பாட்னர் ஜஸ்ட் நவ் சேலம் ( JUSTNOWSALEM ) நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.