ட்ரெண்டிங்

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வர்கள் மீது கடும் நடவடிக்கை! 


சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் உணவுப் பாதுகாப்புத்துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் நேற்றைய தினம் (ஜூன் 28) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவுப்பொருட்கள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு மூன்று மாத கால இடைவெளியில் தொடர்புடைய அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம்
நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள 36,625 உணவு வணிகங்களில் தற்பொழுது வரை 34,242 உணவு வணிகங்களுக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தரமான மற்றும் சுகாதாரமான உணவுகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதிச் செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இதுவரை உணவு பாதுகாப்பு தொடர்பாக சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்பட்ட உணவு நிறுவனங்கள் மீது 810 குற்றவியல் வழக்குகளும், 1,117 உரிமையியல் வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சேலம் மாவட்டத்தில் விற்கப்படுகிறதா என்பது குறித்து தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கண்டறியும் ஆய்வு மாவட்டத்தில் 3,027 கடைகளில் நடத்தப்பட்டுள்ளது.

அவற்றில் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் 209 கடைகளில் சுமார் 2,739 கிலோ கிராம் புகையிலைப் பொருட்கள் கண்டறியப்பட்டு அக்கடைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு ரூபாய் 86 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையுடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டதில் 135 கடைகளும், காவல்துறையினால் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் 73 கடைகளும் என 208 கடைகளும் என மொத்தம் 417 கடைகள் இதுவரை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 876 உணவு மாதிரிகள் எடுத்து ஆய்விற்காக அனுப்பப்பட்டதில் 36 உணவு மாதிரிகள் உணவு பாதுகாப்பு தரங்கள் படி இல்லாதது அறிக்கையின் மூலம் கண்டறியப்பட்டு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்திப் பொருட்கள் விற்பனை செய்த 28 கடைகளுக்கு ரூபாய் 56,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உணவு நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட 34,579 டன் எண்ணெய் சேகரிக்கப்பட்டு பயோ டீசலாக மாற்றுவதற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ் அப் வழியாக 34 புகார்களும், உணவு பாதுகாப்பு செயலி மூலம் 255 புகார்களும் பெறப்பட்டு, அனைத்து புகார்களும் ஆய்வு செய்யப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சேலம் மாவட்டத்தில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், பசுமை எற்காடு (Green Yercaud) திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் இல்லாத ஏற்காட்டை உருவாக்க உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தெருவோர கடைகள் மற்றும் உழவர்சந்தைகளை சுத்தமாக வைத்திருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் உணவுப்பொருட்கள் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் 94440- 42322 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் TN Food Safety Consumer App என்ற செயலியிலும் மற்றும் foodsafety.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.