ட்ரெண்டிங்

சேலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அமைச்சராகிறார்? 

வரும் ஆகஸ்ட் 27- ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார். இந்த சூழலில், 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட உள்ளதாகவும், புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், மூத்த அமைச்சர் ஒருவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

குறிப்பாக, தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சேலம் மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர். 

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்ற முருகானந்தம் இன்று (ஆகஸ்ட் 22) மாலை 05.00 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கவுள்ளார். 

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்திற்கான கோப்புகளை ஆளுநரிடம் தலைமைச் செயலாளர் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை (ஆகஸ்ட் 23) ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளது.