ட்ரெண்டிங்

தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கு கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு!

 

சேலத்தில் நடைபெறவுள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு, மக்களவைத் தேர்தலுக்கான தொடக்கமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

 

தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, வரும் டிசம்பர் 17- ஆம் தேதி சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடக்கும் மாநாடு என்பதால், தி.மு.க.வினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மாநாட்டிற்கு சுமார் 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மாநாடு நடைபெறவுள்ள திடலில், பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைப்பதற்கும், தொண்டர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக, இதுப்போன்ற மாநாடுகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் நிலையில், தற்போது கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படவுள்ளது.

 

ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.க்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து பிற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பதால், இது மக்களவைத் தேர்தல் பரப்புரைக்கான தொடக்கமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.