ட்ரெண்டிங்

சேதமடைந்த 16 கண் மதகு பாலத்தின் தண்ணீர் வெளியேறும் பகுதி!

மேட்டூர் அணையில் 16 கண் மதகு பாலத்தில் நீர் வெளியேறும் பகுதி சிதிலமடைந்து காணப்படுவதால், அதனை சீரமைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மழைக் காலங்களில் அதிகபட்சமாக 4 லட்சம் கனஅடி தண்ணீர் வரை வெளியேற்றும் வகையில், 16 கண் மதகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

தண்ணீரின் வேகம் மற்றும் வெயிலின் தாக்கம் உள்ளிட்டக் காரணங்களால் தண்ணீர் வெளியேறும் பகுதியில் உள்ள கருங்கற்களான சிமெண்ட் காரை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழர்களால் கட்டப்பட்ட இந்த 16 கண் மதகு பாலம் பொலிவை இழக்காமல் பாதுகாக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

இது குறித்து தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியைப் புனரமைக்க 4.5 கோடி ரூபாய் அளவில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினர்.

 

மேலும் பணிகளைத் தொடங்க டெண்டர் விடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.