ட்ரெண்டிங்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு நிறைவேறாது- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

 

அ.தி.மு.க.வின் சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி இன்று (நவ.30) காலை 10.00 மணிக்கு நடந்தது. இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டக் கட்சிகளைச் சேர்ந்த 700- க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.  

 

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சூழ்நிலைக் கருதி பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தது; கூட்டணி வேறு; கொள்கை வேறு என ஜெயலலிதா வகுத்த கொள்கையில் பிறழ மாட்டோம்; தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் அத்தியாவசியப் பொருட்களின் விலை 40% வரை உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் துறை வாரியாக ஊழல் மட்டும் தான் நடக்கிறது

 

உதயநிதியை முதலமைச்சராகக் கொண்டு வர ஸ்டாலின் கடுமையாக முயற்சி மேற்கொள்கிறார்; அது நடக்கவே நடக்காது. இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த அரசு அ.தி.மு.க. அரசு. மக்களைப் பற்றி கவலைப்படாத முதலமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். தி.மு.க. ஒரு குடும்ப கட்சியாக செயல்பட்டு வருகிறது.

 

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதாக பச்சைப்பொய் பேசி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2024 நாடாளுமன்றத் தேர்தலோடு மன்னர் பரம்பரை, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். சந்தனக்கூடு விழாவுக்கு தேவையான சந்தன கட்டையை விலை இல்லாமல் வழங்கியது அ.தி.மு.க. அரசு. ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க 5,245 மெட்ரிக் டன் அரிசியை விலை இல்லாமல் வழங்கியது அ.தி.மு.க. அரசு எனத் தெரிவித்துள்ளார்.