ட்ரெண்டிங்

விண்வெளி நிறுவனங்கள் இஸ்ரோவிடம் சேர்ந்து பயணிப்பதற்கு தயாராக உள்ளனர்- இஸ்ரோ விஞ்ஞானி தகவல்

 

சேலம் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் இஸ்ரோ விஞ்ஞானியும், ஆதித்யா- எல்1 திட்ட இயக்குநருமான நிகார் சாஜி சிறப்பு விருந்தினராகப் கலந்து கொண்டார்.

 

அப்போது, இஸ்ரோ விஞ்ஞானி நிகார் சாஜி பேசியதாவது, இளைய சமுதாயத்தினரிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என்ற கருத்து உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் புத்தகத் திருவிழாக்கள் நடத்துவதன் மூலம் வாசிப்பு பழக்கத்தை வெகுவாக அதிகரிப்பதற்கு ஒரு கருவியாக அமைந்துள்ளது. எந்த ஒரு சமுதாய முன்னேற்றத்திற்கும். தனிமனித முன்னேற்றத்திற்கும் கல்வி என்பது மிக அவசியமானதாகும். குறிப்பாக, அறிவியல் கல்வி மிகவும் அவசியம்.

 

முன்னேற்றம் அடைந்த நாடுகளாக இருந்தாலும், மகிழ்ச்சிக் குறியீட்டில் முன்னிலையில் உள்ள நாடுகளாக இருந்தாலும் அங்கு எழுத்தறிவு விகிதம் என்பது அதிகமாக உள்ளது. ஒரு சமுதாயத்தின் தடை கற்கள் என்பது வறுமை மற்றும் அறியாமை ஆகும். அவ்வாறான வறுமையையும், அறியாமையையும் ஒழிப்பதற்கு கல்வி மிக அவசியமானதாகும்.

 

சந்திரயான் 3, ஆதித்யா- எல்1 போன்ற செயல்திட்டங்களால் மாணவர்களாகிய உங்களிடம் அறிவியல் கருத்துகளின் புரிதல் அதிகரித்துள்ளது. மேலும், இஸ்ரோவின் இதுபோன்ற திட்டங்களால் நம் நாட்டின் மீதுள்ள மரியாதை வெகுவாக அதிகரித்துள்ளது. நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் போன்ற விண்வெளி நிறுவனங்கள் இஸ்ரோவிடம் சேர்ந்து பயணிப்பதற்கு தயாராக உள்ளனர்.

 

எனவே, கற்றல் என்பது பள்ளி கல்லூரிகளுடன் நின்றுவிடக் கூடாது. கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடாகும். தற்போதைய இணையதளம் மற்றும் அறிவியல் யுகத்தில் இன்றைய அறிவியல் கோட்பாடுகள் நாளைய தினம் மாறும் இச்சூழ்நிலையில், நாம் இன்று கற்றது நாளை மாறும் சூழல் ஏற்படாலாம். எனவே, கற்றலை வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

 

அனைவரிடமும் பல்வேறு திறமைகள் உள்ளன. தங்களுடைய திறமைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். தங்கள் வாழ்வில் ஒரு இலக்கினை வைத்துக் கொண்டு, அதை நோக்கிப் பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றி பெற முடியும். இவ்வாறு இஸ்ரோ விஞ்ஞானி நிகார் சாஜி தெரிவித்துள்ளார்.