ட்ரெண்டிங்

"சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விரைவில் விமான சேவை"

"சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விரைவில் விமான சேவை"- எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தகவல்! 

தி.மு.க.வைச் சேர்ந்த சேலம் தொகுதியின் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையத்தில் நடைபெற்று வரும், கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். 

இது தொடர்பாக, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் சேலம் விமான சேவை நிறுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இது சம்மந்தமாக ஒன்றிய விமான போக்குவரத்துறை அமைச்சரை 40 முறைக்கும் மேல் சந்தித்தும், இந்திய பிரதமரிடம் மனு அளித்து சேலம் விமான நிலையத்திலிருந்து விமான சேவை துவங்க தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். அதனை தொடர்ந்து, பல்வேறு கட்டப்போராட்டங்களுக்கு பிறகு சேலம் விமான நிலையம் எனது தொடர் முயற்சியின் காரணமாக இறுதி கட்டத்தில் உதான் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டது.

தற்பொழுது இண்டிகோ விமான சேவை நிறுவனம், சேலம் - ஹைதராபாத் - சேலம், சேலம்-பெங்களூர்- சேலம் ஆகிய வழித்தடங்களில் வாரத்தில் 4 நாட்களுக்கும், அலைன்ஸ் ஏர் நிறுவனம் சேலம்- பெங்களூர்- சேலம், சேலம்- கொச்சி- சேலம் ஆகிய வழித்தடங்களில் வாரத்தில் 7 நாட்களுக்கும்
விமான சேவையைத் துவங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சேலம் விமான நிலையத்திலிருந்து விமான சேவை மேற்கண்ட வழித்தடங்களுக்கு செப்டம்பர் மாத இறுதியில் துவங்கப்படும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.