ட்ரெண்டிங்

மேட்டூர் அணையில் பாசி படர்ந்தது போல் பச்சை நிறத்தில் காணப்படும் தண்ணீர்!

 

மேட்டூர் அணையில் பாசி படலம் படர்ந்தது போல், பச்சை நிறமாக தண்ணீர் மாறியுள்ளதால், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். 

 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், அணையின் வலதுகரை மற்றும் இடதுகரை உள்ளிட்ட நீர்த்தேக்கப் பகுதிகளில் பாசி படர்ந்தது போல் பச்சை நிறத்தில் தண்ணீர் காட்சியளிக்கிறது. 

 

கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள தொழிற்சாலை கழிவுகள், காவிரியில் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதி முழுவதும் தண்ணீர் நிறமாறி உள்ளதாகவும், அதன் விளைவாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், மீனவர்களும், கரையோர மக்களும் குற்றம் சாட்டுகின்றனர். 

 

எனினும், நீர்த்தேக்கப் பகுதிகளில் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் உரத்தின் காரணமாக, தண்ணீரில் பாசி படர்ந்தது போல காணப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்த பிரச்சனை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ள பொதுமக்கள், இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.