ஆன்மிகம்

கார்த்திகைத் தீபத்திருவிழா- அகல்விளக்கு தயாரிக்கும் பணிகள் தீவிரம்!

 

கார்த்திகைத் தீபத்திருவிழா வரும் நவம்பர் 26- ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், சேலம் மாவட்டம், முத்துநாயக்கன்பட்டியில், அகல்விளக்குகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

சக்கரத்தைச் சுழற்றி, களிமண் குவியலை நேர்த்தியாக்கி கைகளால் விளக்குகளைத் தயாரித்த நிலைமாறி தற்போது, அச்சுகளைக் கொண்டு அகல்விளக்குகளைத் தயாரிக்கும் நுட்பத்தை தொழிலாளர்கள் கையாண்டு வருகின்றனர்.

 

மூன்று முக விளக்குகள், ஐந்து முக விளக்குகள், மலர் வடிவம், மாங்கனி வடிவம் என ஒன்பது வகையான விளக்குகள் தயார் செய்யப்பட்டு வரும் சூழலில், விளக்குகள் அண்டை மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

மண்பாண்ட கலைஞர்களுக்கு கடன் உதவி உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்தால், அகல்விளக்கு தயாரிப்பு என்ற பாரம்பரிய தொழிலை அடுத்தத் தலைமுறையினரும் தொடர்ந்திட வழிக்கிடைக்கும் என அகல்விளக்கு தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். களிமண் தட்டுப்பாடு, சூளை அமைப்பதில் சிக்கல், மழை உள்ளிட்டக் காரணங்களால் அகல்விளக்கு தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.