ட்ரெண்டிங்

பேக்கரியில் வாங்கிய பப்ஸ் சாப்பிட்ட மூன்று குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு!

பேக்கரியில் வாங்கிய பப்ஸ்-களைச் சாப்பிட்ட மூன்று குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது கொங்கணாபுரம் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் யாஷினி, யாஷித், சபரி ஆகிய மூன்று குழந்தைகள், பப்ஸ்-களை வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து, சிறிது நேரத்திலேயே அந்த மூன்று குழந்தைகளுக்கும், வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

 

அதைத் தொடர்ந்து, குழந்தைகளின் பெற்றோர், உடனடியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி குமரகுருபரன் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சம்மந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று உணவுகளின் தரம் குறித்து அதிரடி ஆய்வை நடத்தினர். கெட்டுப்போன உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்ததை அடுத்து, அந்த பேக்கரியை மூடி சீல் வைத்தனர்.

 

சீல் வைக்கப்பட்ட B2C பேக்கரி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.