ட்ரெண்டிங்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மூன்று மடங்காக அதிகரித்தது!

 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கனஅடியில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்பட வேண்டிய தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்துக் கடுமையாக சரிந்து வந்தது.

 

இதனால் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 2,000 கனஅடியாகக் குறைந்தது. இந்த நிலையில், தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று (நவ.07) காலை நிலவரப்படி வினாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது வினாடிக்கு 8,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

 

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2,700 கனஅடியில் இருந்து வினாடிக்கு 6,498 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.