ட்ரெண்டிங்

ஏற்காடு கோடை விழா- சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு! 

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 47-வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நடைபெறும் 5 நாட்களும் சுற்றுலாப் பயணிகளுக்கென பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி வரும் மே 22- ஆம் தேதி முதல் மே 26- ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது. சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில் பிரமாண்ட காற்றாலை, சுற்றுச்சூழலில் கடல் வாழ் உயிரினங்களின் பங்கினை உணர்த்தும் வகையில் பவளப்பறைகள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற உருவங்களும், குழந்தைகளிடம் மரம் நடுதலை ஊக்குவிக்கும் வகையில் கார்ட்டூன் கதாபாத்திரங்களான டொனால்டு டக், மிக்கிமௌஸ், டாம் & ஜெரி மரங்களை நடுவது போலவும், நீர் பாய்ச்சுதல் போலவும் காச்சிப்படுத்தப்படவுள்ளது. மேலும், 30,000- க்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், அண்ணா பூங்கா வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரித்திடவும், ஏரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வண்ண மலர்களால் ஆன செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட உள்ளன. அண்ணா பூங்காவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு பல்வேறு வடிவ அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அண்ணா பூங்காவில், ஏற்காட்டில் விளையும் காப்பி இரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை தேவைக்கேற்ப சுவைத்து அந்த காப்பி இரங்களை வாங்கிச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையின் சார்பில் ஏற்காடு படகு இல்லத்தில் மே 22 - ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பொதுமக்களுக்கான படகு போட்டியும், சமூக நலத்துறையின் சார்பில் மே 23- ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பொதுமக்களுக்கான அடுப்பிலா சமையல் போட்டியும், விளையாட்டுத்துறையின் சார்பில் மே 23- ஆம் தேதி அன்று மான்போர்ட் விளையாட்டு மைதானத்தில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆண்களுக்கான கால்பந்து போட்டி, பெண்களுக்கான பந்து வீசுதல் போட்டி, 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நின்று நிலை தாண்டுதல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் மே 25- ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நாய்கள் கண்காட்சியும், சமூக நலத்துறையின் சார்பில் சார்பில் மே 26- ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை குழந்தைகளின் தளிர் நடை போட்டியும் நடத்தப்படவுள்ளது.

சுற்றுலாத்துறை மற்றும் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கொம்பு இசை, சிலம்பாட்டம், பறை இசை, மாடு ஆட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பரதநாட்டிய நிகழ்ச்சி, நாட்டுப்புற பாடல்கள், கரகாட்டம், பப்பட் ஷோ, கிராமிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

கோடைவிழா நடைபெறும் 5 நாட்களும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பல்வேறு திரைப்படங்கள் காலை 11.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கட்டணமின்றித் திரையிடப்படவுள்ளது. மேலும், வனத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மலையேறுதல் போட்டி மே 22- ஆம் தேதி அன்று காலை 06.30 மணிக்கு ஏற்காடு அடிவாரம் வனத்துறையின் சோதனைச் சாவடியிலிருந்து குண்டூர் மலைப்பாதை வழியாக ஏற்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முடிவடையும் வகையில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டியில் 15 வயது முதல் 45 வயது வரை முழு உடல் ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள் தங்கள் சொந்த
பொறுப்பின் பேரில் இந்நிகழ்வில் 99658-34650 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு கலந்து கொள்ளலாம்.
ஏற்காடு கோடைவிழாவினை சுகாதாரமாக கொண்டாடும் வகையில், ஏற்காட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நடமாடும் கழிப்பறைகள், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், அண்ணாமலையார் கோவில், படகு இல்லம் அருகில் உள்ள உடற்பயிற்சி கூடம், ஏற்காடு ரவுண்டான, கரடியூர் வீயூ பாய்ண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ஏற்காடு பேருந்து நிலையம், ஒண்டிக்கடை ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது நான்கு சக்கர மற்றும் இருச்சக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டு, இதற்கான வழிகாட்டி பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் சுற்றுச்சூழல் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடி அருகில், அண்ணா பூங்கா, ஏற்காடு ரவுண்டானா கடைவீதி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளுக்கான சேலத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 12 பேருந்துகளுடன் தற்பொழுது கூடுதலாக 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும். ஏற்காடு ஏரி, பங்கோடா பயிண்ட், சேர்வராயன் கோவில் மற்றும் லேடிஸ் சீட் ஆகியவற்றை இணைக்கும்படி 3 உள்வட்ட சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.

மேலும், ஏற்காடு கோடைவிழா நடைபெறும் நாட்களில் காலை 08.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கரடியூர் காட்சிமுனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டைக் காட்சி முனை, பக்கோடா பயிண்ட், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், ஏற்காடு ஏரி அண்ணா பூங்கா மற்றும் தாரவியல் தோட்டத்துடன் மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையம் வந்தடையும் வகையில் 300 ரூபாய் கட்டணத்தில் பேக்கேஜ் பேருந்து இயக்கப்படவுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.