ட்ரெண்டிங்

பெங்களூர்-சேலம்-ஹைதராபாத் பயணிகள் விமான சேவையைத் தொடங்கியது இண்டிகோ ஏர்லைன்ஸ்!  

 

 சேலம் விமான நிலையத்தில் இருந்து மத்திய அரசின் உதான் 5 திட்டத்தின் கீழ் பெங்களூர்-சேலம்-ஹைதராபாத் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

 

சேலம் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமான சேவை இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 16- ஆம் தேதி முதல் தொடங்கியது.

 

அன்றைய தினம் பெங்களூர்-சேலம்-கொச்சி விமான சேவையை அலையன்ஸ் ஏர் நிறுவனம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சேலம்-சென்னை தினசரி விமான சேவையை இண்டிகோ நிறுவனம்  அக்டோபர் 29- ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

 

அதன் தொடர்ச்சியாக, பெங்களூர்-சேலம்-ஹைதராபாத் விமான சேவையும் இண்டிகோ நிறுவனம் சார்பில் இன்று (அக்டோபர் 30) தொடங்கியுள்ளது.

 

காலை 10.20 மணிக்கு பெங்களூரில் இருந்து சேலம் வந்த விமானத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, காலை 10.40 மணிக்கு சேலத்தில் இருந்து ஹைதராபாத் நகரத்திற்கு முதல் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. 

 

மாலை 03.25 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து சேலத்தில் விமானம் வந்தது. அப்போது மழை பெய்த நிலையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் மழையில் நனையாமல் இருக்கும் வகையில் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே குடைப்பிடித்து அழைத்துச் சென்றனர். 

 

புதிய வழித்தடம் மூலம் சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு சேலத்தில் இருந்து செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

 

பெங்களூர்-சேலம்-ஹைதராபாத் வழித்தடத்தில் மத்திய அரசின் உதான்-5 திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள பயணிகள் விமான சேவை வாரத்தில் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும். 

 

இந்த விமான சேவை மூலம் பெங்களூர் வழியாக, அகமதாபாத், புவனேஸ்வர், போபால், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 10 விமான நிலையங்களைச் சென்றடைய முடியும். ஹைதராபாத் வழியாக கோழிக்கோடு, கோவா, டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ உள்ளிட்ட 30 விமான நிலையங்களை சென்றடைய முடியும். மேலும், கொழும்பு, கோலாலம்பூர், சிங்கப்பூர், அபுதாபி,குவைத் உள்ளிட்ட 11 சர்வதேச நகரங்களுக்கும் சேலம் வழியாக இணைப்பு வழித்தடத்தில் விமான சேவையை பெறலாம்.

 

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டதன் வாயிலாக சென்னை, பெங்களூர், கொச்சி மற்றும் ஹைதராபாத் ஆகிய நான்கு மாநில நகரங்களுக்கான விமானப் பயணம் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.